அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது போர் தொடுப்பதற்கான 48 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள சம்பவம், உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் முக்கிய கடல் வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்க வேண்டும் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இன்னும் 48 மணிநேரம் தான்.. அதன் பிறகு வானத்திலிருந்து நரகம் அவர்கள் மீது மழையாகப் பொழியும்” என அவர் எச்சரித்துள்ள விதம் உலக நாடுகளைப் பதற வைத்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) முன்னாள் தலைவரான முகமது எல்பாரடேய், ஐநா சபை மற்றும் வளைகுடா நாடுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தயவுசெய்து இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள். இந்தப் பிராந்தியமே நெருப்புப் பந்தாக மாறுவதற்குள் வளைகுடா தலைவர்கள் தலையிட்டுப் போரைத் தடுக்க வேண்டும்” என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரில், அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதும், பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதும் சூழலை இன்னும் மோசமாக்கியுள்ளது.

டிரம்பின் இந்த 48 மணிநேரக் கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், மத்திய கிழக்கில் எந்நேரமும் பெரும் போர் வெடிக்கும் சூழல் நிலவுகிறது.