கடந்த 2024 மற்றும் 2025-ஐ தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் தொடக்கமும் ஐடி ஊழியர்களுக்கு பெரும் கவலையை அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. அமேசான், மெட்டா மற்றும் ஓருக்கிள் (Oracle) போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து வருகின்றன.
குறிப்பாக, ஓருக்கிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சுமார் 30 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி பணிநீக்கங்களுக்குப் பின்னால் ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஊழியர்களுக்கான சம்பளத்தைச் மிச்சப்படுத்தி, அந்தப் பில்லியன் கணக்கான டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
மெட்டா நிறுவனம் தனது ‘Year of Efficiency’ திட்டத்தின் கீழ் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், பிளாக் இன்க் (Block Inc) போன்ற நிறுவனங்கள் தங்களின் 40 சதவீத ஊழியர்களை ஒரே அடியாக நீக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக AI கருவிகளே பெரும்பாலான வேலைகளைச் செய்யும் சூழல் உருவாகி வருவது ஐடி துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
