ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘பிக் பாஷ் லீக்’ டி20 தொடரின் இறுதிக்கட்டத்தில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடி வந்த பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் திடீரென விலகியுள்ளார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடி வரும் பாபர் ஆசாமுக்கும், அதே அணியின் மூத்த வீரரான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையே சுமூகமான உறவு நீடிக்கவில்லை எனத் தெரிகிறது. சமீபத்திய போட்டிகளின்போது மைதானத்தில் பாபர் ஆசாம் அவமானப்படுத்தப்பட்டதாகவும், இது குறித்து அவர் சக வீரர்களிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. உலகத்தரம் வாய்ந்த இரு முன்னணி வீரர்களுக்கு இடையே நிலவிய இந்த பனிப்போர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாபர் ஆசாம் தொடரிலிருந்து விலகுவதாக சிட்னி சிக்ஸர்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் முக்கிய வீரரான பாபர் ஆசாம், நடப்பு பிக் பாஷ் தொடரிலிருந்து விடைபெறுகிறார். டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இணைந்து அவர் தீவிரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”
உலகக் கோப்பை முன்னேற்பாடுகளைக் காரணம் காட்டி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டாலும், ஸ்மித்துடனான மோதல் போக்கினாலேயே அவர் பாதியிலேயே வெளியேறுகிறார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாபர் ஆசாம் விலகியது சிட்னி பாக். ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
