சேலம் அருகே செல்போனில் ‘கேம்’ விளையாடுவதைக் கண்டித்ததால் மனமுடைந்த 11 வயது பள்ளி மாணவன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், திருமலைகிரி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு தீனா (11) என்ற மகன் இருந்தார். தீனா அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வந்தான்.

சிறுவன் தீனாவுக்கு செல்போனில் அடிக்கடி ஆன்லைன் விளையாட்டுகளை (Games) விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்காகப் பாடங்களைப் படிக்காமல் நீண்ட நேரம் செல்போனிலேயே மூழ்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவனது பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறி செல்போன் விளையாட்டைக் கண்டித்துள்ளனர்

பெற்றோரின் கண்டிப்பால் மனமுடைந்த தீனா, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், செல்போன் விளையாட்டைப் பெற்றோர் தடுத்ததால் ஏற்பட்ட மனவருத்தத்திலேயே சிறுவன் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஒருவன் செல்போன் விளையாட்டிற்காக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.