தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திமுக அரசு கடனாளியாக்கி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, ஊழலிலும் கடன் வாங்குவதிலும் தான் தமிழகம் தற்போது முதலிடத்தில் இருப்பதாகவும், இந்த கடனை அடைக்க மக்கள் மீது கூடுதல் வரிச்சுமை சுமத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் பெருகியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்த அவர், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 39 திமுக கூட்டணி எம்பிக்களும் தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் முடங்கிப் போயிருப்பதாகச் சாடினார்.
அதிமுக எப்போதும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்றும், காவிரி விவகாரம் போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகக் கூட்டணியில் இருந்தபோதும் துணிச்சலாகப் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டிவிட்டு, தற்போது ஆளுங்கட்சியானதும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
