2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார்.
அதிமுக ஒருபோதும் யாருக்கும் அடிபணிந்தது கிடையாது என்றும், ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல, அது மக்களை ஏமாற்றி ‘கொள்ளையடிக்கும்’ கூட்டணி என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
அதிமுக கூட்டணி மிகவும் வலிமையானது என்றும், தேர்தல் பணிகளில் அதிமுக தற்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடிமைகளாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீட்டின் போது ஒரு கூட்டணித் தலைவர் அழுதுகொண்டே வெளியே வந்ததை நாடே பார்த்தது என்றும் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.
கேரளாவில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் காங்கிரஸும், கம்யூனிஸ்டும் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி ஒரே கொள்கையோடு இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
திமுக கூட்டணி மக்களை ஏமாற்றும் நாடகத்தை நடத்தி வருவதாகவும், வரும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
