தமிழக அரசியலில் இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இத்தனை காலம் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த ஓபிஎஸ், இப்போது திமுகவின் கரைவேட்டியை கட்டிக்கொண்டு ‘உதயசூரியன்’ நிழலுக்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “இனிமேல் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன்” என அதிரடியாகத் தெரிவித்தார். அவரிடம் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “வாய்ப்பு தந்தால் நிச்சயம் போட்டியிடுவேன்” என தனது விருப்பத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்தார். அதிமுக – திமுக என காலம் காலமாக இருந்து வந்த பகைக்கு நடுவே, ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.