தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலைப் போலவே 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்போ கூடுதல் தொகுதிகளையும் முக்கியப் பொறுப்புகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

புதிய கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதால், காங்கிரஸின் கோரிக்கையை ஏற்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த இழுபறியால் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் இறுதி முடிவை எட்டாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் திமுகவை அதிரவைத்துள்ளது.

காங்கிரஸைத் தங்கள் பக்கம் இழுக்க தவெக தரப்பு சுமார் 70 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் சுதாரித்துக்கொண்ட திமுக தலைமை, உடனடியாகக் காங்கிரஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய்யுடன் கைகோர்த்தால், அது திமுகவின் வாக்கு வங்கியில், குறிப்பாகச் சிறுபான்மையினர் வாக்குகளில் பெரிய பிளவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினருடன் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பழையபடி 25 தொகுதிகளே கிடைக்குமா அல்லது தவெக காட்டும் பச்சைக்கொடியால் காங்கிரஸ் புதிய முடிவை எடுக்குமா என்பது விரைவில் தெரியவரும். இந்தக் கூட்டணி மாற்றங்கள் வரும் தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.