பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், அம்மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள சிஸ்வா பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பயிலும் 4-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், கடந்த திங்கள்கிழமை பள்ளி முடிந்து போதையில் தள்ளாடியபடி வீட்டிற்குச் சென்றுள்ளான்.

மேலும் அவனது பேச்சிலும் நடையிலும் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, பள்ளிக் கழிப்பறையில் இருந்த மதுவை தான் அருந்தியதாக சிறுவன் ஒப்புக்கொண்டான். அளவுக்கு அதிகமான போதையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுவன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது தேறி வருகிறான்.

இந்தச் சம்பவம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் பள்ளி வளாகத்தில் சோதனையிட்டார். அப்போது, பள்ளியின் பின்புறம் பயன்படுத்தப்படாமல் இருந்த கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 அட்டைப் பெட்டிகளைப் போலீசார் கைப்பற்றினர். அதில் சுமார் 204 லிட்டர் சட்டவிரோத மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மது மாஃபியாக்கள் பள்ளிக்கூடங்களையே தங்கள் பதுங்கு இடங்களாக மாற்றியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் அரசுக்கும் மது கடத்தல்காரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.