அகமதாபாத்தின் சந்த்கேடா பகுதியில் இரண்டு பிஞ்சு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது பகீர் திருப்பத்தை எடுத்துள்ளது.

ஆரம்பத்தில் தோசை மாவு சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சு (Food Poisoning) என கருதப்பட்ட நிலையில், இது பெற்றோரே திட்டமிட்டு செய்த தற்கொலை முயற்சியோ அல்லது கொலையோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

உயிரிழந்த மூன்று வயது மிஷ்ரி மற்றும் மூன்று மாதக் குழந்தை ரஹாவின் தந்தை விமல் பிரஜாபதி மற்றும் தாய் பவானா ஆகியோர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பது போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதே பால் பண்ணையில் தோசை மாவு வாங்கிய 200-க்கும் மேற்பட்டோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், இந்தக் குடும்பத்திற்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாய்ப்பால் மட்டுமே குடித்த மூன்று மாதக் குழந்தை இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது தடயவியல் நிபுணர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உணவில் நச்சு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் நச்சுப் பொருள் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தடய அறிவியல் ஆய்வகத்தின் (FSL) அறிக்கைக்காகக் காத்திருக்கும் போலீசார், தந்தை விமல் பிரஜாபதியிடம் இன்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

முதல் குழந்தையின் இறப்பை ஏன் அமைதியாக மறைத்தார்கள், இரண்டாவது குழந்தை இறந்த பிறகு ஏன் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க தாமதம் ஆனது போன்ற கேள்விகள் இந்த மர்மத்தை மேலும் அதிகமாக்கியுள்ளன. இந்தச் சம்பவம் அகமதாபாத் நகரையே உலுக்கியுள்ள நிலையில், உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.