மங்களூரில் உள்ள குலூர் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரமான விபத்தில், ஒரு தனியார் மருத்துவமனை ஊழியரான மாதவி என்ற பெண் உயிரிழந்தார். செப்டம்பர் 9 அன்று நடந்த இந்த விபத்தில், மாதவி தனது ஸ்கூட்டரை ஓட்டும்போது, நெடுஞ்சாலையில் இருந்த ஒரு குழியால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மீன் ஏற்றிச் சென்ற லாரி அவரை மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, @MangaloreCity என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு வைரலானது.

இந்த விபத்து நெடுஞ்சாலையின் மோசமான நிலை காரணமாக நடந்ததாக உள்ளூர் மக்களும் இணையவாசிகளும் கோபத்துடன் தெரிவித்தனர். முல்கி முதல் பம்ப்வெல் வரையிலான நெடுஞ்சாலையில் பல குழிகள் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மங்களூரு வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் குற்ற எண் 224/2025-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நெடுஞ்சாலையை சரியாக பராமரிக்காமல், குழிகளை அடைக்காததற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிக்கு எதிராகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நடந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.