தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில், ஒரு வீட்டு வேலைக்காரரும், அவரது கூட்டாளியுமான மற்றொரு நபரும், உரிமையாளரை கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரேணு அகர்வால் எனப்படும் 50 வயதான பெண், ஹைதராபாத்தில்  ஸ்வான் லேக் எனப்படும் உயர்ந்த பாதுகாப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது குடியிருப்பின் 13-வது மாடியில்.

புதன்கிழமை காலை 10 மணியளவில், அவரின் கணவரும், 26 வயது மகனும் வேலைக்குச் சென்ற பின்னர், அகர்வால் தனியாக வீட்டில் இருந்தார். அவர் செல்போன்  அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், பிற்பகலில் வீடு திரும்பினர். வீட்டுக்கதவை திறக்க முடியாத நிலையில், பிளம்பர் ஒருவரின் உதவியுடன் கதவை திறந்தபோது, அகர்வால் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், அகர்வாலை முதலில் கயிறு அல்லது துணியால் கைகளை கட்டி வைத்து, பிரஷர் குக்கரை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கியதும், பின்னர் கத்தி மற்றும் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்ததும் தெரியவந்துள்ளது.

 

காவல்துறையினர், குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்வதும் பதிவாகியிருந்தது. அத்துடன், இருவரும் அகர்வாலின் வீட்டிலிருந்து சுமார் 40 கிராம் தங்கம் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் அந்த குடியிருப்பில் வீட்டு வேலைக்காரர்களாக பணிபுரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஹர்ஷா என்ற ஒருவர், 10 நாட்களுக்கு முன்பு ஒரு மனிதவள நிறுவனம் மூலம் அகர்வாலின் வீட்டில் பணியமர்த்தப்பட்டவர். மற்றொரு நபர் ரூஷன், அதே கட்டிடத்தின் 14வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலையுடன் தொடர்புடைய இருவரும் தற்போது ராஞ்சி பகுதிக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக, சைபராபாத் காவல்துறையினர் ஐந்து தனிப்படை குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.