பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் பிரியங்கா சோப்ரா, தனது திரைப்பயணத்தை 2002-ம் ஆண்டு விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் தொடங்கினார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனது முதல் பட அனுபவங்கள் மற்றும் நடிகர் விஜய் குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், “தமிழன் படப்பிடிப்பின் போது விஜய்யைப் பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான கூட்டத்தைக் கண்டு நான் வியந்து போனேன்.

அந்த வயதில் ஒரு நடிகரின் புகழ் என்பது என்ன என்பதை எனக்குப் புரிய வைத்ததே நடிகர் விஜய்தான்,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யின் நடனம் மற்றும் நடிப்பைக் காண வரும் ரசிகர்களின் அன்பைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். ஆரம்பத்தில் புகழும் நடிப்பும் ஒன்றுதான் என்று தான் தவறாக நினைத்திருந்ததாகவும், ஆனால் ஒருவரது கடுமையான உழைப்பிற்குப் பிறகு கிடைக்கும் அங்கீகாரமே அந்தப் புகழ் என்பதைப் பின்னாளில் தான் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மக்கள் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதையும், ஒரு நட்சத்திர அந்தஸ்து எப்படி உருவாகிறது என்பதையும் விஜய்யிடம் இருந்தே கற்றுக் கொண்டதாக பிரியங்கா சோப்ரா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.