செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கத் தயாராக இல்லாத ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியேறலாம் என கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் போட்டி அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் வேகத்திற்கு ஏற்ப செயல்பட முடியாதவர்கள் அல்லது ஏஐ மாற்றங்களை முழுமையாக ஏற்கத் தயங்குபவர்கள் வெளியேறுவதே சிறந்தது என கூகுளின் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இந்த முடிவால் விற்பனை மற்றும் நிறுவன வளர்ச்சி போன்ற துறைகளில் பணியாற்றும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 25,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் சட்டப்பூர்வப் பாதுகாப்போடும், அடுத்த வேலை தேடுவதற்கான கால அவகாசத்தோடும் கண்ணியமாக வெளியேற இந்த ‘பை அவுட்’முறை வழிவகை செய்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதால், எதிர்கால சவால்களைச் சந்திக்கத் தயார் நிலையில் இருப்பவர்கள் மட்டுமே பணியில் தொடர முடியும் என்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.