இந்தியாவில் உணவு டெலிவரி சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) களமிறங்க உள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதம் முதல் பெங்களூருவில் தனது உணவு டெலிவரி சேவையை ஒரு முன்னோட்டமாகத் தொடங்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தச் சேவை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே மளிகைப் பொருட்கள் விநியோகத்தில் (Quick Commerce) ‘மினிட்ஸ்’ (Minutes) என்ற பெயரில் கலக்கி வரும் பிளிப்கார்ட், இப்போது உணவிலும் கையை வைக்கப் போகிறது.

​கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் உணவு டெலிவரி சந்தை சுமார் ₹800 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. இந்த மிகப்பெரிய வருவாய் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே பிளிப்கார்ட் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்காகத் தனி ஆப் அல்லது ONDC தளம் வழியாகச் செயல்படுவது குறித்து அந்நிறுவனம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிளிப்கார்ட்டின் இந்த வருகை, சந்தையில் நிலவும் போட்டியை அதிகரிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிகச் சலுகைகளையும் குறைந்த விலையில் உணவுகளையும் கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஐபிஓ (IPO) திட்டங்களை முன்னிட்டு இந்த விரிவாக்கம் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.