ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை ஓடையைக் கடக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி மேம்பாடு குறித்து அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிர்வாகத்தின் அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

கிராமத்தில் உள்ள சாக்கடை ஓடையின் மீது பாலம் இல்லாததால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஓடையின் குறுக்கே போடப்பட்டுள்ள ஒரு சிறிய மரக்கட்டையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் அந்த மரக்கட்டையின் மீது ஒவ்வொரு அடியையும் கவனமாக வைத்து, நிலைதடுமாறாமல் கடந்து செல்லும் இந்தக் குழந்தைகளின் ஆபத்தான பயணம் காண்போரை நெஞ்ச நடுங்க வைக்கிறது.

பருவமழை காலத்தில் இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கிராமமே பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படுகிறது. சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்தும் தங்கள் கிராமத்தின் நிலை மாறவில்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஓடையின் மீது பாலம் கட்டிக் தருமாறு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் மன்றாடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பிறகு கிராமத்தைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சிறு தவறு நடந்தாலும் குழந்தைகளின் உயிர் பறிபோகும் அபாயம் உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பிள்ளைகளை இந்த ஆபத்தான பாதையிலேயே பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர் உள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் அரசு மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள், 20 ஆண்டுகால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.