மதிமுக துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவருமான மல்லை சத்யா கட்சியின் கொள்கைக்கே எதிராக செயல்பட்டதாகக் கூறி, நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார்.
மத்தியில் வைகோவின் மகன் துரை வைகோ முதன்மை செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து, கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே சலசலப்பு உருவானது. இதையடுத்து, தன்னை மற்றும் தனது ஆதரவாளர்களை புறக்கணிப்பதாகக் கூறி, கடந்த மாதம் மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தச் சம்பவம் கட்சியின் ஒழுங்குமுறைகளை மீறியது என மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய, மல்லை சத்யாவை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி, விளக்கம் கோரப்பட்டது. மல்லை சத்யா விளக்கக்கடிதம் அனுப்பியும், அதில் திருப்தி இல்லை எனக் கூறிய வைகோ, இன்று அவரது நிரந்தர நீக்கத்தைக் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா,
“ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக்குத் தெரிந்ததும் தான். துரை வைகோவின் வருகைக்குப் பிறகு, மதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது வைகோ, கட்சி வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், தனது மகனை மட்டுமே முன்னிறுத்துகிறார். வரும் திங்கட்கிழமை, என் ஆதரவாளர்களுடன் சந்தித்து, ஜனநாயக முறையில் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்,” என்றார்.
