தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் உண்மையான போட்டி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையேதான். இதை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வில் தோல்வி பயம் பரவியுள்ளது. இந்த கூட்டணி வருகிற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உறுதியடைந்துள்ளது” என்றார்.

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணங்களை குறித்து விமர்சித்த அவர், “இது அவருடைய ஐந்தாவது வெளிநாட்டு பயணம். இப்பயணங்களால் மாநிலத்திற்கு என்ன நன்மை கிடைத்தது என்பதற்கான முழு விளக்கமும் அளிக்கப்பட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து தொழில்முனைகள் செயல்பாட்டுக்கும் வந்தன. ஆனால் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்ட உடனே தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே தான் அடுத்து வரும் தேர்தலில் போட்டி என்று கூறிவரும் நிலையில் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.