உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த தொழிலாளி ஒருவர் தான் பதித்த புதிய டைல்ஸ்களைச் சுத்தியால் அடித்து உடைக்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீட்டின் உரிமையாளர் பேசியபடி முழு கூலியைக் கொடுக்க மறுத்ததே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. “கஷ்டப்பட்டு வேலை பார்த்தும் எங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை, அதனால் தான் செய்த வேலையை நாங்களே உடைக்கிறோம்” என்று அந்தத் தொழிலாளி வேதனையுடன் அந்த வீடியோவில் தெரிவிக்கிறார்.



இந்தச் சம்பவம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் ஒப்பந்தக் கூலி குறித்த பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் உழைப்பிற்கு ஊதியம் கொடுக்காத உரிமையாளரைக் கண்டித்தாலும், மற்றொரு தரப்பினர் சொத்துக்களைச் சேதப்படுத்துவது சரியல்ல என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். உழைப்பவனுக்கு உரிய ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்காதபோது ஏற்படும் விரக்தியின் உச்சத்தை இந்த வீடியோ அப்பட்டமாகப் படம்பிடித்துள்ளது.