முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவரது கார் ஓட்டுநர் வேலையை விட்டு நின்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவலை ஓ.பி.எஸ்-ஸின் கார் ஓட்டுநர் முற்றிலும் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் எதற்காக அவசரமாக காரில் இருந்து இறங்கினேன் என்பதற்கான உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார்.

​அவர் பேசுகையில், “ஐயாவை (ஓ.பி.எஸ்) விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததே நான்தான். கார் நின்றவுடன் பின்னால் வரும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், ஐயாவிடம் கொடுக்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்தவுமே நான் அவசரமாக இறங்கினேன். ஆனால், இந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நான் வேலையை விட்டுப் போய்விட்டதாகத் தவறான செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

ஒரு டிரைவரான நான் வேலையை விட்டால் என் வாழ்க்கை என்னவாகும்? எதற்காக என் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை” என மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.