உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கு ‘சீனியர் அட்வகேட்’ அந்தஸ்து வழங்குவது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்கள் குறித்து தெரிவித்துள்ள சர்ச்சை கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தமக்கு அந்த அந்தஸ்து வேண்டும் என மனுதாக்கல் செய்த வழக்கறிஞரின் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் அவரது தொழில்முறை நடத்தையை விமர்சித்த நீதிபதி, “வேலையில்லாத சில இளைஞர்கள் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தும் ‘கரப்பான் பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ போலச் செயல்படுகிறார்கள்” என மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.
வேலை கிடைக்காதவர்கள் ஊடகவியலாளர்களாகவும், சமூக வலைதளப் போராட்டக்காரர்களாகவும், ஆர்டிஐ (RTI) ஆர்வலர்களாகவும் மாறி அமைப்பின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், பல வழக்கறிஞர்களின் பட்டங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த தலைமை நீதிபதியின் இந்த ‘கரப்பான் பூச்சி’ ஒப்பீடு, சட்டத் துறையிலும் பொதுவெளியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
