கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே கரம்பொடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (42) என்ற தொழிலாளி, திருமணமாகாதவர். அவர், மூங்கில்மடா பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழகி வந்தார்.

பழக்கம் தீவிரமாகி, இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் கணவர் ஆறுச்சாமி (45), இதை அறிந்து, சந்தோஷிடம் இந்த உறவை முற்றிலும் கைவிடுமாறு எச்சரித்திருந்தார். ஆனால் உறவு தொடர்ந்ததால், சம்பவத்தன்று இரவு, சந்தோஷ் வீட்டில் அந்த பெண்ணுடன் இருந்த போது ஆறுச்சாமி திடீரென வந்தார்.

அதிக ஆத்திரத்தில் கம்பலால் தாக்கிய அவர், சந்தோஷை படுகாயமடையச் செய்தார். சம்பவத்தால் பதற்றம் அடைந்த அந்த பெண் நேரில் கொழிஞ்சாம்பாறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, சந்தோஷ் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சித்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணதாஸ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், ஆறுச்சாமி தான் சந்தோஷை தாக்கி கொலை செய்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். காதல், நம்பிக்கை ஆகியவற்றால் தொடங்கிய உறவு, இறுதியில் உயிரை குடித்த சம்பவமாக இது திரிந்துள்ளது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.