தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த முருகன் (54) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மாரிராஜா (23) அமரர் ஊர்தி ஓட்டுநராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று முருகன் காலை வேலைக்குச் சென்று, மதிய உணவிற்காக வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மகன் மாரிராஜா வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததை கவனித்த அவர், வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு முற்றிய நிலையில், மாரிராஜா தந்தையை வீட்டிற்கு வெளியே தள்ளியதாகவும், பின்னர் அரிவாளால் தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முருகன் பலத்த காயமடைந்தார்.

சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதையடுத்து, மாரிராஜா அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த முருகனை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாரிராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.