புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட இழுபறியால் தற்போது தேர்தல் களம் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளது. தொகுதி உடன்பாடு இறுதியாவதற்கு முன்பே, இரு கட்சிகளைச் சேர்ந்த பலரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தந்தக் கட்சியினர் தங்களது வேட்பாளர்களைப் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு (வேட்புமனுவைத் திரும்பப் பெற) அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், இதற்குப் பல வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமை உத்தரவை மீறி, தங்களது அலைபேசிகளைச் ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு அவர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் அரசியல் திருப்பம் புதுச்சேரி திமுக – காங்கிரஸ் கூட்டணியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
