அரசியலில் முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் அமித் ஷாவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில், வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “உலக வரலாற்றில் தாய்மொழியைக் காக்க உயிரைத் தியாகம் செய்த பெருமை தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது. இந்தி மொழி ஏற்கனவே பல மாநிலங்களின் தாய்மொழிகளை விழுங்கிவிட்டது. அதனால்தான், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தி திணிப்பைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மொழி உரிமையைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தமிழகம் தான் முன்மாதிரியாக உள்ளது.”

“தமிழகம் ‘டபுள் டிஜிட்’ வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இங்கு எதற்கு ‘டபுள் இன்ஜின்’ அரசு? ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்தால், அதற்குப் பிரதமர் மோடி தான் வேந்தர். ஊழல், மாஃபியா எனக் குற்றஞ்சாட்டும் மோடியுடன் தான் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.”

“அரசியலில் நாம் முரட்டுத் தொண்டர்களைக் கண்டிருப்போம். ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். பாஜக என்ன சொன்னாலும் செய்ய அவர் தயாராக இருக்கிறார். இவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்து நாடகமாடுகிறார்கள். இந்த பாசிசக் கூட்டத்திற்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.