டெல்லி ரிங் ரோட்டில் உள்ள டெல்லி கன்டோன்மென்ட் மெட்ரோ நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஒரு BMW கார், மோட்டார் சைக்கிளை இடித்ததில், மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரியான நவ்ஜோத் சிங் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். 52 வயதான நவ்ஜோத் சிங், நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். அவர் மேற்கு டெல்லியின் ஹரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் ஐஐஎம் லக்னோவில் பயிற்சி முடித்துவிட்டு மீண்டும் அலுவலகத்தில் பணியில் சேரவிருந்தார்.

இந்நிலையில் நவ்ஜோத் சிங் தனது மனைவியுடன் பங்கலா சாஹிப் குருத்வாராவுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தவுலா குவான் பகுதியில் வேகமாக வந்த BMW கார் அவர்களின் மோட்டார் சைக்கிளை இடித்தது. இதில் நவ்ஜோத் சிங் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி பலத்த காயமடைந்தார். காரை ஓட்டிய பெண்ணும் அவரது கணவரும், காயமடைந்தவர்களை டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி கார் ஒட்டி வந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.