உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விகாஸ்நகர் பகுதிக்கு உட்பட்ட கடாபத்தர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலையை ஒரு நபர் தனது பைக்கில் கடக்க முயன்றார்.

அங்கு நின்றிருந்த பொதுமக்கள், நீரின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் அச்சாலையைக் கடக்க வேண்டாம் என அவரை உரத்த குரலில் எச்சரித்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் எச்சரிக்கையை முற்றிலும் அலட்சியம் செய்துவிட்டு அந்த நபர் வெள்ளத்திற்குள் தனது வாகனத்தை இறக்கினார்.

நீர் நிரம்பி வழிந்த சாலையின் நடுவே சென்றபோது, நீரின் கடுமையான வேகம் காரணமாக அவர் தன் வாகனத்தின் மீதான கட்டுப்பாாட்டை முழுமையாக இழந்தார். கண் இமைக்கும் அந்த நொடிப்பொழுதில், பைக்குடன் சேர்த்து அவர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

 

வாகன ஓட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாகத் துணிச்சலான மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். கொந்தளித்து ஓடிய வெள்ளத்தில் துணிச்சலாகக் குதித்த அவர்கள், அந்த நபரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அந்த நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த ஒருவரின் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆபத்தான நீர்நிலைகளைக் கடக்க வேண்டாம் என அரசு நிர்வாகம் மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.