வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை உருவாகியிருக்கிறது. மேலும், காற்றின் வேக மாற்றம் மற்றும் கிழக்கு முதல் மேற்குத் திசை நோக்கி நகரும் மேகங்கள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், புயல் சின்னம் வங்கக்கடலில் தென்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.