ஹரியானா மாநிலத்தில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, மிகவும் மோசமான நிலையில் தனது வீட்டிலேயே முடங்கிக் கிடந்த முதியவர் ஒருவர் சமூக நல அமைப்பால் மீட்கப்பட்டுள்ளார். சக மனிதநேயத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஹரியானா மாநிலம் கர்ணால் நகரின் உள்ள ஒரு வீட்டில், முதியவர் ஒருவர் மிக மோசமான நிலையில் வசிப்பதாக ‘அப்னா ஆஷியானா’  என்ற சமூக நல அமைப்புக்குத் தகவல் கிடைத்தது. அந்த அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் அரோரா தலைமையிலான குழுவினர் அங்கு சென்றபோது, அந்த முதியவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அந்த முதியவர் கடந்த 18 மாதங்களாகத் தனது உடைகளை மாற்றாமல் இருந்தது தெரியவந்தது. உடல் முழுவதும் துர்நாற்றம் வீச, சுகாதாரமற்ற சூழலில் அவர் தனியாகக் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்க்க, அந்த அமைப்பினர் அவரைத் தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் கூறியதாவது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் யாருடனும் சேராமல் தனிமையை விரும்பினார். ஹரியானாவில் இருந்த வீட்டில் அவரைப் பராமரிக்க உதவியாளர் ஒருவரை நியமித்திருந்தோம். ஆனால், அவர் அங்கு தங்க மறுத்துவிட்டு, பழைய வீட்டிலேயே ஒற்றை ஆளாகத் தங்கிவிட்டார் என்றனர்.

https://twitter.com/Indian__doctor/status/2026275574369399154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2026275574369399154%7Ctwgr%5E79a2f77f75055f3145215a03dc139d7c579ceb34%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-18520458752390013692.ampproject.net%2F2601162341000%2Fframe.html

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “பெற்றோரை விடப் பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. வெளிநாட்டில் செட்டில் ஆகி என்ன பயன்? சொந்தத் தந்தையை இவ்வளவு கேவலமான நிலையில் விட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயல்,” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது அந்த முதியவர் மீட்கப்பட்டு, ‘அப்னா ஆஷியானா’ காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.