சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மிகத் தெளிவான மற்றும் ஆக்ரோஷமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “வெற்றி என்பது தானாக வராது; தான் மட்டுமின்றி பிறரின் வெற்றிக்காகவும் உழைப்பவர்களுக்குத் தான் தேர்தலுக்குப் பின் உரிய பரிசு தேடி வரும்” என அவர் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தல் சவால்களை எதிர்கொள்ள கட்சியினர் தங்களது உழைப்பை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும், வெற்றியைக் குறிவைத்து ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “திராவிட மாடல் வெற்றி பெற்றுவிட்டது என்ற செய்தி நம் காதுகளை எட்டுவது வரை யாரும் ஓய்வெடுக்கக் கூடாது; களத்தில் நின்று கடுமையாக உழைக்க வேண்டும்” என முதல்வர் விடுத்த கட்டளை திமுக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
