கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மீது 500 ரூபாய் பந்தயம் கட்டிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தும்கூரில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி கபடி போட்டியின் போது, விஜயபுரா அணி வெற்றி பெறும் எனக் கூறி மாவட்ட துணை ஆணையர் சுபா கல்யாணிடம் அமைச்சர் 500 ரூபாய் பந்தயம் கட்டியதாகத் தெரிகிறது.
ஆனால், அந்தப் போட்டியில் தட்சிண கன்னட அணி வெற்றி பெற்ற நிலையில், பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தான் பந்தயத்தில் தோற்றுவிட்டதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந்தச் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பொது இடத்தில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது எனக்கூறி எச்.ஆர். நாகபூஷன் என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கே.என். சிவகுமார், ஒரு பொறுப்பான அரசியலமைப்பு பதவியில் இருக்கும் அமைச்சர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது எனக் கூறி, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார். வெறும் 500 ரூபாய்க்காகத் தொடங்கிய இந்த நட்பு ரீதியிலான பந்தயம், தற்போது மாநில உள்துறை அமைச்சருக்கே சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
