தெலுங்கானா மாநிலத்தில் வெங்காயத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட் சந்தையில் வெங்காயம் ஒரு குவிண்டால் 150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது.
இதன் காரணமாக, விகாராபாத் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேறு வழியின்றி சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை 3 முதல் 4 ரூபாய் வரை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். டிராக்டர்களில் கொண்டு வரப்படும் 50-60 கிலோ எடையுள்ள வெங்காய மூட்டைகள் வெறும் 200 ரூபாய்க்கு விற்கப்படும் அவலநிலை நீடிக்கிறது.
இந்த விலை வீழ்ச்சியால் தங்களுக்கு போக்குவரத்து செலவு கூடக் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒருபுறம் போதிய விலை கிடைக்காத சூழல் நிலவினாலும், மற்றொரு புறம் பருவம் தவறி பெய்யும் மழையினால் விளைச்சல் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில், கிடைக்கும் குறைந்தபட்ச விலையாவது வரட்டும் என்ற நோக்கில் வெங்காயத்தை விற்று வருகின்றனர்.
