மைசூருவில் அரங்கேறியுள்ள இந்த விநோத காதல் திருமணம், தற்போது சட்ட ரீதியான பாதுகாப்பைத் தேடி காவல்துறை வரை சென்றுள்ளது. 37 வயதுப் பெண்ணும், 22 வயது இளைஞரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

​பெங்களூரைச் சேர்ந்த கவிதா (37) என்பவருக்கும், மைசூரைச் சேர்ந்த பாஸ்கர் (22) என்பவருக்கும் பெங்களூரில் உள்ள ஒரு கோயிலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகத் தொடர்ந்த இவர்களது காதல், திருமணத்தில் முடிந்துள்ளது. கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சூழலில், தன்னைவிட 15 வயது இளையவரான பாஸ்கரைத் திருமணம் செய்ய கவிதா எடுத்த முடிவு, அவரது குடும்பத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கவிதாவின் தந்தை பாஸ்கர் மீது கடத்தல் புகார் அளித்த நிலையில், கவிதாவின் மைத்துனர் தங்களைக் கொலை செய்யப் போவதாக மிரட்டுவதாகக் தம்பதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். பெங்களூரில் பாதுகாப்பு இல்லை எனக் கருதிய தம்பதியினர், தற்போது மைசூரு எஸ்பி அலுவலகத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர். வயது வித்தியாசம் மற்றும் குடும்பப் பின்னணி காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மோதல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.