இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். இந்நிலையில், பாகிஸ்தான் இளம் வீரர் ஹசன் நவாஸ் இந்திய பந்துவீச்சாளர்களைக் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரின் போது, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த ஹசன் நவாஸிடம், “உலகில் எந்த நாட்டு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவிக்க விரும்புகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்:
நாங்கள் எப்போதும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் குவிக்கவே விரும்புகிறோம். இது மிக எளிமையானது, எங்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவர் மீதும் வெறுப்பு இருக்கிறது. இறைவன் நாடினால், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவிப்போம்,” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
Hasan Nawaz said, “I think we’ve to attack the Indian bowlers. I hate every single bowler on the Indian team.” (Qadir Khawaja) pic.twitter.com/kBvSb8MT74
— Sheri. (@CallMeSheri1_) April 27, 2026
கடந்த 2025-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ஹசன் நவாஸ், இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 457 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இவர், அதில் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிஎஸ்எல் (PSL 2026) தொடரிலும் 10 போட்டிகளில் விளையாடி வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான ஃபார்மில் உள்ளார்.
ஏற்கனவே 2025 ஆசியக் கோப்பையின் போது, ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியது. இதன் எதிரொலியாக, டாஸ் போடும்போது கூட இந்திய கேப்டன் பாகிஸ்தான் கேப்டனுக்கு கைகொடுக்க மறுத்த நிகழ்வு அரங்கேறியது.
இத்தகைய சூழலில், சர்வதேச அளவில் பெரிய சாதனைகள் ஏதும் செய்யாத ஒரு இளம் வீரர், இந்திய வீரர்களை ‘வெறுப்பதாக’ பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
