ஐபிஎல் 2026 கால்பந்து தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ், நடப்பு சீசனில் தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கியது. 3 ஓவர்களிலேயே இந்த ஜோடி 50 ரன்களைக் கடந்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்தார். கேப்டன் ரியான் பராக் 20 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 11 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இந்த ஆட்டத்தில் அனைவரது கவனமும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மீதே இருந்தது. பும்ரா வீசிய ஓவரில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 15 ரன்களைக் குவித்த அவர், அடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சிலும் ஒரு சிக்ஸர் அடித்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 5-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விளாசினார்.

 

இருப்பினும், அதே ஓவரின் கடைசி பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வைபவ் ஆட்டமிழந்தார். 14 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்த அவர், அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதால் மிகுந்த விரக்தியடைந்தார். மைதானத்திலேயே பேட்டைத் தட்டி தனது கோபத்தை வெளிப்படுத்திய அவர், பெவிலியன் திரும்பும்போது கண்களைத் துடைத்தபடி (அழுதபடி) சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக நமன் திர்: 25 ரன்கள் (13 பந்துகள்) ரூதர்ஃபோர்ட்: 25 ரன்கள் (8 பந்துகள்) திலக் வர்மா: 14 ரன்கள் எடுக்க  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் தரப்பில் நாண்ட்ரே பர்கர், ரவி பிஷ்னோய் மற்றும் சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த தொடர்ச்சியான இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.