ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், இந்த சீசனில் தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கவுகாத்தியில் பெய்த கனமழை மற்றும் மைதான ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு, இப்போட்டியானது தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி வலுவான இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 11 ஓவர் முடிவில் தோல்வியைத் தழுவியது.
வெற்றிக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், தனது அணியின் பந்துவீச்சாளர்களை வெகுவாகப் புகழ்ந்தார். அவர் கூறுகையில், “தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம். ஜோப்ரா ஆர்ச்சரிடம் பந்தை வேகமாக வீசுமாறு மட்டுமே கூறியிருந்தோம். 145 முதல் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி, அதன் மீது துல்லியமான கட்டுப்பாடு வைத்திருப்பது வியப்பிற்குரியது. அவருக்கு நாண்ட்ரே பர்கர் சிறந்த ஒத்துழைப்பு அளித்தார்,” எனத் தெரிவித்தார்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் ஆட்டம் குறித்துப் பேசிய பராக், “தற்போது ஐபிஎல் தொடரிலேயே இவர்கள்தான் ‘நம்பர் 1’ தொடக்க ஜோடி. ஜெய்ஸ்வால் கடந்த சில ஆண்டுகளாகவே நிலைத்து ஆடி வருகிறார். வைபவ் சூர்யவன்ஷி சூழலைப் புரிந்துகொண்டு விளையாடும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அகமதாபாத் போட்டியிலேயே அவரது திறமையை நான் அங்கீகரித்துவிட்டேன்,” என்றார்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரியான் பராக்கின் சாதுரியமான கேப்டன்சியால் மும்பை இந்தியன்ஸ் அணியை 11 ஓவர்களுக்குள்ளேயே ராஜஸ்தான் மண்டியிட வைத்துள்ளது. மேலும் மும்பை பேட்டர்கள் யாரும் ராஜஸ்தானின் பந்துவீச்சுக்கு முன்னால் நிலைத்து நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
