ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமும், அவர் ஆட்டமிழந்த போது வெளிப்படுத்திய உணர்ச்சிகரமான எதிர்வினையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்திலேயே வானளாவிய சிக்ஸர் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பும்ராவின் அந்த ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், டிரெண்ட் போல்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் (3.2 ஓவர்கள்) 59 ரன்களையும், 11 ஓவர்கள் முடிவில் 150 ரன்களையும் குவித்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய வைபவ், 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பை அணி விரித்த துல்லியமான பீல்டிங் வியூகத்தில் அவர் சிக்கினார்.
Shardul Thakur dismissed Vaibhav Sooryavanshi, but not before an opening stand of 80 in 5 overs 🔥pic.twitter.com/uN5GEKipDe
— Cricbuzz (@cricbuzz) April 7, 2026
சிறப்பான பார்மில் இருந்த நிலையில், அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதால் வைபவ் மிகுந்த ஏமாற்றமடைந்தார். அவுட்டானவுடன் “அய்யோ.. ஏன் இப்படி செய்தோம்” என்பது போல முகத்தை கைகளால் மூடிக்கொண்டு மைதானத்திலேயே அமர்ந்துவிட்டார். பின்னர் விரக்தியில் தனது பேட்டை தரையில் தட்டியபடி அவர் மைதானத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், கவுகாத்தி மைதானத்தில் நிலவிய திடீர் காலநிலை மாற்றம் குறித்து மும்பை வீரர் ரோகித் சர்மா வேடிக்கையாகக் கருத்து தெரிவித்துள்ளார். “அடடே.. திடீரென குளிர் எப்படி இவ்வளவு அதிகமாகிவிட்டது?” என அவர் கேட்க, சக வீரர் ஹர்திக் பாண்டியா குளிரில் நடுங்கியபடி ரியாக்ஷன் கொடுத்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
