பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையில் உள்ள குளறுபடிகளை, முல்தான் சுல்தான்ஸ் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் கடுமையாக விமர்சித்துள்ளார். திங்கள்கிழமை லாகூரில் நடைபெற்ற ராவல்பிண்டிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் தனது குமுறலை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான ஆஷ்டன் டர்னர் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், மற்ற அணிகளை விட முல்தான் அணிக்கு மிக நெருக்கடியான கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முல்தான் அணி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் திங்கள்கிழமை ராவல்பிண்டி அணியை எதிர்கொண்டது. தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டர்னர், ஓய்வெடுக்க நேரமே இல்லை. நான் இங்கேயே ஒரு போர்வையையும் தலையணையையும் தேடிப் பிடித்து தூங்கப் போகிறேன். அடுத்தடுத்த போட்டிகளுக்கு இடையே மிகக்குறைந்த இடைவெளியே வழங்கப்படுகிறது, என கிண்டலாகவும் அதேசமயம் ஆதங்கத்துடனும் தெரிவித்தார்.

பி.எஸ்.எல் 2026 தொடரில் முல்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில், பெஷாவர் சால்மி அணி இதுவரை வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. மற்ற அணிகள் 3 அல்லது 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இத்தகைய சீரற்ற கால அட்டவணை வீரர்களின் உடல்நலனை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சீசனில் ஆஷ்டன் டர்னர் மிகச்சிறந்த பார்மில் உள்ளார். 5 இன்னிங்ஸ்களில் 129 ரன்கள் குவித்துள்ள அவர், 189.70 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக 2019-ல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, தொடர்ச்சியாக 5 டி20 போட்டிகளில் ‘டக்-அவுட்’ ஆகி மோசமான சாதனை படைத்திருந்தார் டர்னர். ஆனால், தற்போது பாகிஸ்தான் மண்ணில் முல்தான் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.