உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் 16 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 புடவைகளுக்காகப் பெற்ற தாயே தனது 12 வயது சொந்த மகளை விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாரணாசியின் சாரநாத் பகுதியில் கடந்த மே 21 அன்று சிறுமி ஒருவர் தனியாக அழுதுகொண்டே அலைந்து திரிவதைக் கண்ட உள்ளூர் மக்கள், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், குழந்தைகள் நலக் குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமைகளைக் கண்ணீருடன் வாக்குமூலமாக அளித்துள்ளார். சிறுமியின் இந்த வாக்குமூலம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம், லஹ்ரு யாதவ் (எ) ராகேஷ் (40) என்ற மனைவியை இழந்த நபர், சிறுமியின் தாயை அணுகியுள்ளார். அப்போது, அச்சிறுமியின் தாய் வெறும் 16,000 ரூபாய் பணம் மற்றும் 10 புடவைகளைப் பெற்றுக்கொண்டு, தனது பெற்ற மகளையே அந்த நபருக்கு விலை பேசி விற்றுள்ளார். விலைக்கு வாங்கிய சிறுமியைத் திருமணம் செய்வதற்கு, 40 வயதான லஹ்ரு யாதவ் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனக்கு வயது குறைவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, டெல்லியில் சுமார் 90,000 ரூபாய் செலவில் தலைமுடி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளார். பின்னர், ள ஒரு கோவிலில் வைத்து அச்சிறுமியைச் சட்டவிரோதமாகக் கட்டாயத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு, சிறுமியைத் தனது வீட்டிலேயே அடைத்து வைத்த லஹ்ரு யாதவ், தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை அளித்துள்ளார். மேலும், வீட்டின் அனைத்துக் கடினமான வேலைகளையும் செய்யக் கட்டாயப்படுத்திச் சித்ரவதை செய்துள்ளார். மைனர் சிறுமியை வீட்டில் வைத்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று அண்டை வீட்டாரும் உள்ளூர் மக்களும் லஹ்ரு யாதவை எச்சரித்துள்ளனர். இதனால் பயந்துபோன யாதவ், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கடந்த மே 19 அன்று அந்தச் சிறுமியைப் யில் நிலையத்தில் தனியாகக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
ரயில் நிலையத்தில் தனியாக அழுதுகொண்டிருந்த சிறுமியிடம் வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவி வர்மா என்ற ஆட்டோ ஓட்டுநர், அவளை அவளது தாயிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார். ஆனால், அவளை ஏமாற்றி ஒரு ஆள்நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்குக் கூட்டிச் சென்று, அங்கும் அச்சிறுமியைப் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், மே 21 அன்று சிறுமியை அங்கேயே தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
தற்போது மீட்கப்பட்டுள்ள சிறுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகளும், உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் தாய், சிறுமியை விலைக்கு வாங்கிய லஹ்ரு யாதவ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ரவி வர்மா ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
