ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில், ஆசியாவிலேயே மிக உயரமான பகுதியான கொண்டோலா (Gondola) கேபிள் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நடுவானில் கேபிள் காருக்குள்ளேயே தவித்து, அந்தரமாகத் தொங்கும் பயங்கர சூழல் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பயத்தில் அலறியடித்த நிலையில், மாவட்ட நிர்வாகம், காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உடனடியாக களத்தில் இறங்கி ஒரு பிரம்மாண்ட கூட்டு மீட்புப் பணியைத் தொடங்கினர்.

மிகவும் ஆபத்தான மற்றும் சவாலான இந்தச் சூழலில், மீட்புக் குழுவினர் கயிறுகள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, நடுவானில் சிக்கியிருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமாக மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் நிம்மதியுடன் தெரிவித்துள்ளனர்