அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்திற்குச் சொந்தமான நகைக்கடையில், ஒரு நிமிடத்தில் ரூ.16 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் ஃபிரிமாண்ட் (Fremont) பகுதியில் ‘குமார் ஜூவல்லர்ஸ்’ என்ற பெயரில் இந்திய வம்சாவளியினர் நகைக்கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று, முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென கடைக்குள் புகுந்தது. கையில் வைத்திருந்த சுத்தியல் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு, அங்கிருந்த கண்ணாடிக் பேழைகளை நொடிப் பொழுதில் உடைத்து நொறுக்கினர்.

சுமார் ஒரு நிமிட இடைவெளியில், கடையின் 75 சதவீத இருப்பு நகைகளைத் தங்களது பைகளில் அள்ளிக்கொண்டு அக்கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 16 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார், கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். கொள்ளையர்கள் திருடப்பட்ட கார்களைப் பயன்படுத்தி தப்பித்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர்கள் வெவ்வேறு திசைகளில் கார்களைச் செலுத்தியதால், எந்தக் காரைப் பின்தொடர்வது என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இறுதியில் ஒரு கருப்பு நிற அகுரா (Acura) காரை போலீசார் விரட்டினர். குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 80 மைல் வேகத்தில், போக்குவரத்து விதிகளை மீறிச் சென்ற அந்தக் காரை விடாமல் துரத்திச் சென்ற போலீசார், 19 மற்றும் 20 வயதுடைய நான்கு இளைஞர்களைக் கைது செய்தனர்.

பல ஆண்டுகளாகப் அப்பகுதியில் தொழில் செய்து வரும் இந்தியக் குடும்பத்திற்கு இந்தச் சம்பவம் பெரும் பொருளாதார இழப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. “சினிமா பாணியில் இவ்வளவு துல்லியமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது” எனப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சிறு வணிக நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய திட்டமிட்ட கொள்ளைச் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது அந்நாட்டு வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மற்ற கொள்ளையர்களைப் பிடிக்கவும், திருடப்பட்ட நகைகளை மீட்கவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.