ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் அந்த நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள் குறித்த ரகசியத் தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 92.54 கோடி) வரை வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஈரானின் நீண்டகால உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அவரையும் ஈரானின் மற்ற முக்கியத் தலைவர்களையும் ‘பயங்கரவாதத் தலைவர்கள்’ என அமெரிக்கா முத்திரை குத்தியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல்வேறு பிரிவுகளை வழிநடத்தும் முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய நம்பகமான தகவல்களை அளிப்பவர்களுக்கு, அமெரிக்காவின் ‘நீதிக்கான வெகுமதி’ (Rewards for Justice) திட்டத்தின் கீழ் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பரிசு வழங்கப்படும்.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் சுமார் 92.54 கோடி ரூபாய் ஆகும். அமெரிக்காவின் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு தனிநபருக்காக அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பரிசுத் தொகைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதும் அமெரிக்கா, அந்தப் படைகளைக் கட்டளையிடும் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஏற்கனவே நிலவி வரும் கடும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் ஈரானின் புதிய தலைமைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த மோதல் போக்கு சர்வதேச அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவருகிறது.
