காலணிகள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ‘பாடா இந்தியா’ (Bata India), வாடிக்கையாளர் ஒருவரிடம் காகிதப் பைக்கு (Paper Bag) கூடுதலாக 6 ரூபாய் வசூலித்த விவகாரத்தில், நுகர்வோர் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு அதிரடியாக 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் தற்பொழுது கார்ப்பரேட் மற்றும் வணிக வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பிரீதி அகர்வால் என்ற பெண் நுகர்வோர், கடந்த மே 2023-இல் அங்குள்ள பாட்டா ஷோரூம் ஒன்றில் 1,499 ரூபாய்க்கு காலணி வாங்கியபோது, பில்லிங் கவுண்டரில் இருந்த ஊழியர் அவரிடம் கேட்காமலேயே பையின் விலையாக 6 ரூபாயைக் கூடுதலாகப் பில்லில் சேர்த்துள்ளார்.
“வாங்கிய பொருளை பாக்ஸோடு கையில் தூக்கிக்கொண்டா போக முடியும், பை தருவது நிறுவனத்தின் கடமை” என்று அந்தப் பெண் வாதிட்டதோடு, கடையில் இதுகுறித்த எந்த ஒரு முன் அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை என்று கூறி தெற்கு டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் கதவைத் தட்டியுள்ளார்.
நீதிமன்ற விசாரணையில், பாட்டா நிறுவனம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பல வாதங்களை முன்வைத்த போதிலும், தலைவரான மோனிகா ஏ. ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் பில்லிங் கவுண்டரில் வைத்து திடீரென பைக்குக் காசு வசூலிப்பது தேசிய நுகர்வோர் விதிகளுக்கு எதிரானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பைகளில் நிறுவனத்தின் லோகோ (Logo) அச்சிடப்பட்டிருந்தால் அதற்குப் பணம் வாங்குவது முற்றிலும் சட்டவிரோதம் என்றும், லோகோ இல்லாத பையாக இருந்தாலும் அதை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பார்த்து முடிவெடுக்கும் வகையில் கடையில் தெளிவான அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்றும் கூறி, பாட்டா நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டிற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ள இந்த நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு, தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி, “இனிமேல் நம்மகிட்ட கேரி பேக்குக்கு காசு கேட்டா இந்தத் தீர்ப்பைக் காட்டுங்க!” என்று நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்ஸ்களை அள்ளி இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
