உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில், வெறிநாய் கடித்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டதாகக் கூறி, சுமார் 200 கிராம மக்கள் ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு, உணவுடன் ரய்தா (தயிர் பச்சடி) பரிமாறப்பட்டது. அந்த பச்சடியை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எருமையிடமிருந்து கறக்கப்பட்டது.
அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு ஒரு வெறிநாய் கடித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, துக்க நிகழ்வு முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 26-ம் தேதி, அந்த எருமை திடீரென உயிரிழந்தது. ரேபிஸ் நோயின் அறிகுறிகளுடன் எருமை இறந்ததாகக் கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
இதனால், அதன் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தங்களுக்கும் ரேபிஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் கிராமம் முழுவதும் பரவியது.
தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் உடனடியாக கிராமத்துக்குச் சென்று, பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தினர்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமேஸ்வர் மிஸ்ரா கூறியதாவது:
“பொதுவாக பாலை நன்றாகக் காய்ச்சிக் குடித்தால், ரேபிஸ் வைரஸ் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் நோய் அறிகுறிகள் தென்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
