மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு பெஸ்ட் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த கோர விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விபத்து இரவு 10 மணியளவில் நிகழ்ந்தது. அப்போது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் மக்கள் அதிக அளவில் அந்தப் பகுதியில் கூடியிருந்தனர். அருகிலுள்ள ஒரு புடவை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில், பெஸ்ட் பேருந்துக்காக வரிசையில் காத்திருந்த பயணிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளனர்.
CCTV footage of bhandup bus accident
footage shows several passengers standing on the roadside when a bus suddenly approaches at high speed
People start running to save their lives #Bhandup#BESTbus@MumbaiPolice @mybmc pic.twitter.com/1VQxUdqSdN
— Indrajeet chaubey (@indrajeet8080) December 30, 2025
சில நிமிடங்களில் திடீரென பீதி ஏற்பட்டது. பாதுகாப்புக்காக பலர் கடைக்குள் ஓடிய காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன்பின், ஒரு பேருந்து அதிவேகமாக பின்னோக்கிச் சென்றபோது, அதன் பின்புற டயர் சாலையோரத்தில் நின்றிருந்த பயணிகளை மோதித் தள்ளியது. அந்த நேரத்தில் ஒருவர் பேருந்தின் கீழ் சிக்கி உயிரிழக்கும் காட்சிகள் காணப்படுவது பார்வையாளர்களை உலுக்கியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நெரிசலான ரயில் நிலையப் பகுதிகளில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனங்களையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், மூத்த அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். மேலும், கூடுதல் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, அந்தப் பகுதி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதுகுறித்து துணை காவல் ஆணையர் ஹேம்ரா சிங் ராஜ்புத் கூறுகையில், “இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார். விபத்துக்குள்ளான பேருந்து, பெஸ்ட் நிறுவனத்திற்காக வெட் குத்தகை முறையில் இயக்கப்பட்ட 9 மீட்டர் நீளமுள்ள குளிரூட்டப்பட்ட ‘ஒலெக்ட்ரா’ மின்சார பேருந்து ஆகும். இது நாகர்தாஸ் நகர் – பாண்டுப் நிலையம் இடையே இயக்கப்படும் 606-வது வழித்தடத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக பெஸ்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாண்டுப் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பகுதி, மும்பையின் மிகவும் நெரிசலான புறநகர்ப் பகுதிகளில் ஒன்று என்றும், நடைபாதைகளின் பெரும்பகுதியை வியாபாரிகள் ஆக்கிரமித்திருப்பதால், பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதுவே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
