திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேற்று கைது செய்யப்பட்டார். அந்தத் தயாரிப்பாளர் தனது புகாரில், சவுக்கு சங்கர் தன்னிடம் ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் ‘Red & Follow’ படம் வெளிவராமல் தடுப்பேன் என்று கூறி தனது அலுவலகத்துக்கு வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்கு சென்றபோது, தயாரிப்பாளர் ரூ. 1 லட்சம் மட்டுமே இருப்பதாகக் கூறவே, சவுக்கு சங்கர் “நான் என்ன பிச்சைக்காரனா?” என்று ஆத்திரமடைந்து, பணத்தைப் பிடுங்கி வீசிவிட்டு, தயாரிப்பாளரின் உயிர்நாடியில் எட்டி உதைத்ததாகவும் அதிர்ச்சி தகவலைப் பதிவிட்டுள்ளார்.



​மேலும், சவுக்கு சங்கருடன் இருந்த மாலதி மற்றும் நான்கு பேர் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைதான நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒரு பயனர் எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார். “இதுபோன்ற பணம் பிடுங்கி, சங்கருக்கு வக்காலத்து வாங்க வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரைக் குறிப்பிட்டு (Tag) அந்தப் பதிவைப் பகிர்ந்து, அரசியல் விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.