பீகார் மாநில அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர், ஆங்கிலத்தில் பேசுவதற்குப் போராடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஓர் பத்திரிக்கையாளர் அந்த ஆசிரியரிடம் கேள்விகள் கேட்கிறார். ஆனால், அந்த ஆசிரியர் சரியான இலக்கணம் மற்றும் உச்சரிப்பு இன்றி, உடைந்து போன ஆங்கிலத்தில் (“Nice question you” என்பது போல) பதிலளிக்க முயல்கிறார். நிதிஷ் குமார் மற்றும் பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் இப்படி ஆங்கில அறிவு இல்லாமல் இருப்பது, மாநிலக் கல்வியின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோ வெளியான பிறகு, இணையவாசிகள் அந்த ஆசிரியரைப் பலவாறு கேலி செய்து வருகின்றனர். “இதைவிட எங்க அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு ஊழியர் கூட நன்றாக ஆங்கிலம் பேசுவார்” என்றும், “இவர்கள் யாருக்கெல்லாம் பாடம் சொல்லித் தரப் போகிறார்கள்?” என்றும் கருத்து தெரிவித்து மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். எனினும், சிலர் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட ஆசிரியரைக் குறை சொல்வதை விட, அரசின் கல்வித் திட்ட தோல்வியே காரணம் என்று வாதிடுகின்றனர். பீகாரில் ஆசிரியர்கள் பெரும்பாலும் பொது அறிவு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாகவும், முறைகேடுகளும் நடப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஒரு வீடியோ, பீகார் மாநிலத்தின் நீண்டகால கல்வித் தரப் போராட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பள்ளிக் கட்டமைப்பை விரிவாக்க அரசு முயற்சித்தாலும், ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரமற்ற பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் போன்ற கடுமையான சவால்களை மாநிலம் இன்னும் எதிர்கொள்கிறது. தேசிய அடைவுத் தேர்வு அறிக்கைகளும் பீகார் மிகவும் பின்தங்கியிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, இந்தச் சம்பவம் பீகார் கல்வி முறையை அவசரமாகச் சீர்திருத்த வேண்டியதன் தேவையை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்கிறது.
