வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work from home) வேலைகளில் ஊழியர்களைக் கண்காணிக்கும் முறைகள் எல்லை மீறுவதாகக் கூறி, ஒரு இளம்பெண் அந்த வேலையையே நிராகரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘குர்லீன்’ என்ற பெண்மணி பகிர்ந்துள்ள வீடியோவில், தான் சமீபத்தில் ஒரு நிறுவனத்தில் நேர்காணலில் பங்கேற்ற அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் அந்த வேலை மிகவும் சிறப்பானதாகத் தெரிந்தாலும், அந்நிறுவனம் ஊழியர்களைக் கண்காணிக்கும் விதம் குறித்து விளக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் விதிகளின்படி, ஊழியர்கள் வேலை நேரம் முழுவதும் தங்களது ‘வெப்கேம்’ (Webcam) கேமராவை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஊழியர்களின் கணினித் திரையை ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை அந்நிறுவனம் தானாகவே ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து கண்காணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், நீங்கள் மனிதர்களை வேலைக்கு எடுக்கிறீர்களா அல்லது ரோபோக்களையா? 10 நிமிடம் கூட என்னால் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்க முடியாது. உற்பத்தித் திறனை அளவிடுவது முக்கியம் தான், ஆனால் இது ஒருவிதமான சித்ரவதை  போன்றது. இவ்வளவு நெருக்கடியான சூழலில் என்னால் வளர முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gurleen (@sprinkleofgurleen_)

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இதைவிட அலுவலகத்திற்கே சென்று வேலை செய்வது எவ்வளவோ மேல்” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையில் ஊழியர்களின் தனிவுரிமை  பறிக்கப்படுவதாகவும், நிறுவனங்கள் ஊழியர்களை நம்ப மறுப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் ‘டிஜிட்டல் கண்காணிப்பு’ என்ற பெயரில் ஊழியர்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.