தெலுங்கானா மாநிலம் அஸ்தினாபுரத்தில், கணவரின் குடும்ப வன்கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் ஒருவர் தனது 11 மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மகளின் மரணத்தைத் தாங்க முடியாமல் அவரது தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  யஷ்வந்த் ரெட்டி – சுஷ்மிதா (27) தம்பதியினர் அஸ்தினாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு அஸ்வந்த் நந்தன் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. யஷ்வந்த் ரெட்டி தனது மனைவி சுஷ்மிதாவை யாருடனும் பேசக்கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் கூறி அடிக்கடி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே நீண்டகாலமாகத் தகராறு நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை யஷ்வந்த் ரெட்டி அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, மனமுடைந்த சுஷ்மிதா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார். பின்னர், தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்த சுஷ்மிதாவின் தாய் லலிதா (50), மகள் மற்றும் பேரன் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து நிலைகுலைந்து போனார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவரும் அங்கிருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மயங்கிய நிலையில் இருந்த லலிதா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுஷ்மிதாவின் தற்கொலைக்கு அவரது கணவரின் தொடர் சித்திரவதையே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், யஷ்வந்த் ரெட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.