பாரதிய ஜனதா கட்சி சாதி, மதப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்குமான கட்சியாகத் திகழ்கிறது என்றும், அது முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கம் அல்ல என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தனது சொந்த ஊரான நாக்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: “பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் என்பது சாதி, மதம் மற்றும் மொழிப் பாகுபாடின்றி மக்கள் பணியாற்றுவதையே எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. நான் ஒரு தீவிர பாஜக தொண்டனாக இருந்தபோதிலும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என அனைவருக்குமே பொதுவானவனாகவே பணியாற்றி வருகிறேன். அரசுப் பணிகளில் ஒருபோதும் நான் பாகுபாடு காட்டியதில்லை.
பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. நாங்கள் பயங்கரவாதிகளுக்கும், அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் மட்டுமே எதிரானவர்கள். இந்த தேசத்திற்காகத் தியாகம் செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும், இந்துக்களைப் போலவே எங்களுக்கு அன்பானவர்களே. ஒருவர் மசூதிக்குச் செல்லலாம், மற்றொருவர் குருத்வாரா அல்லது புத்த விகாருக்குச் செல்லலாம். நாம் வழிபடும் இடங்கள் வேறாக இருக்கலாம்; ஆனால் நம் அனைவரின் ரத்தமும் ஒன்றுதான். நாம் அனைவரும் இந்த பாரத தேசத்தின் புதல்வர்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.
மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் வன்முறை ஏற்படும் என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. அமைதி மற்றும் வளர்ச்சியே எங்களது தாரக மந்திரம்,” என்று நிதின் கட்காரி பேசினார்.
